திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சுதந்திர தினம்

கொண்டாடும் போதெல்லாம்

திண்டாடும் இந்தியாவே

உனக்கு சுதந்திர தினம் தேவை தானா ?


அன்று ...

பரங்கியரிடம்

பணிந்து பெற்றதை


இன்று ...

பண முதலைகளிடம் அல்லவா

பகிர்ந்து கொடுத்து விட்டோம் !


என்று ...

உண்மை சுதந்திரம்

கிடைக்குமோ ?

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

மனசு .......


தவறு செய்த
என் மகளை
தவறி அடிக்க
முடிந்த என்னால் .... ஏனோ ...



தவறாமல்
அழாது இருக்க
முடியவில்லை !


ஒவ்வொரு முறையும்
என் கைதனை
பார்த்து வருத்தப் படுகிறேன் !



"நீ ....
என்னையும் மீறி
சில நேரம்
எல்லை மீறி விடுகிறாய்" என !




என் செய்வேன்...
அழாதே என்று சொல்ல மனம்
தயார்தான் - ஆனால்

கண்ணீர் துடைக்க ......
கை அல்லவா
கடமை மறந்து
கயமை பாராட்டுகிறது !

செவ்வாய், 28 ஜூன், 2011

திருமணம் என்னும் தெய்வீகம்



இரு மனங்களை

இணைத்து

வைத்து ....




ஒரு புது மலரை

உருவாக்கும் ....

அறிய முயற்சி !




மனங்களால்

மணம் வீசுகின்ற ....

மானிட புரட்சி !



மனம் அது

மாறிப்போனால் ....

வரும் வறட்சி !



நல்ல குணங்களால்

மெல்ல வந்து

சேர்ந்திடும் வளர்ச்சி !



இன்னுமா ...

உங்கள் மனங்களில்

இருக்கிறது தளர்ச்சி !



என்றென்றும்

தங்கட்டும்

உங்களிடம் மலர்ச்சி !

வெள்ளி, 24 ஜூன், 2011

காதல் தீதா?


வஞ்சிக் கொடி ஒன்று

கெஞ்சலாய் ...

வாடித் துவண்டிருந்தாள் !



வாஞ்சையாய்

கேட்கையில் ...

துடித்து அழுதாள் !



ஆறுதல் என்ற

அரும் மருந்தால் ...

அன்யோன்யம் ஆனாள் !



ஊன்று கோலாய்

நான் நிற்க ...

என்னையே பற்றி படர்ந்தாள் !



சான்று சொல்ல

நினைக்கையில் ...

அன்னியப் பார்வையில் ஐக்கியமானாள் !



கசங்கிய அவள்

கண்ணை ...

கசக்கியபடி வந்து சேர்ந்தாள் !



வருந்தி அழுததில்

என் இதயம் ...

ஓட்டை ஆனது !



வழிந்த என்

ரத்தத்தில் ... - மீண்டும்

வளரத் துவங்கினாள் !



அந்த வஞ்சிக் கொடி ...

நானோ கேள்விக் குறி !

திருமணம்



சிலருக்கு ...

சொர்க்கத்திலும்


பலருக்கு

ரொக்கத்திலும்


நிச்சயிக்கப்படுகிறது !

திங்கள், 20 ஜூன், 2011

மனசு ....

உனக்காக ... மட்டுமே
இருப்பதாக நினைப்பு ...
எனக்கு ....

யாருக்காகவோ
இருப்பதாக நினைப்பு
உனக்கு ...

வெள்ளி, 17 ஜூன், 2011

தேடல்

நாம் இருவரும்

நடந்து வந்த மணற்பரப்பில்

தேடித்திரிகிறேன் ...



நம் காலடித் தடமாவது

பிரியாமல் இருக்கும் என்ற

நம்பிக்கையில் ...



நம் பாதச் சுவடுகளிடம்

எப்படிச் சொல்வேன்

இனி நீ வரவே மாட்டாய் என்று ...

தொலைந்த மனம் ...

சிறு கை நீட்டி ...

சின்னப் புன்னகை காட்டி ...


குட்டிக் கால்களால் எட்டி ...


குட்டிக் கண்களால் சிமிட்டி ...



கொஞ்சிக் குழாவிடும்

உந்தன் இதழ் விரிப்பில் ...



கெஞ்சித் தவிப்பது

எந்தன் நெஞ்சம் மட்டுமல்ல ...



உந்தன் சிறு விரல் பற்றி

நடந்த நம் முதல்

மணல் பயணம் ...



இப்படியாக .....................

என்னைக் கொள்ளையிட்ட

உந்தன் பகல் கொள்ளையில் ...



தொலைந்து போனது

எந்தன் இதயம் மட்டும் அல்ல ...

என் வாழ்க்கையும்தான் ...

நம்பிக்கை

எல்லாம் சரி
எனக்கும் சம்மதம் தான் ....
உனக்காக நான் ....

நான் மாற மாட்டேன்
நீ தெளிவாய் இரு ....
தைரியமாய் இரு ...

என்றெல்லாம் சொன்னது
நீதானா என்ற
சந்தேகம் எனக்கு ....

இன்னமும் .....
ஏனோ எனக்கு
உன் மீது சந்தேகம் வரவேயில்லை !

வியாழன், 16 ஜூன், 2011

மையா இல்லை பொய்யா

முன்பெல்லாம்

மை எழுதும்

உன் கண்ணில் ...



இப்போதெல்லாம்

என்னவோ

பொய்யல்லவா

எழுதிப் போகிறாய் .....

செவ்வாய், 14 ஜூன், 2011

உன்னிடம் .....

சத்தியமாக
சொல்கிறேன் ....

என்னிடம் ....
உன் நினைவுகள் இல்லை !

உன் நினைவுகளிடம்தான்
நான் இருக்கிறேன் !!

சனி, 11 ஜூன், 2011

நூலகம்...


அறிவுக் குழந்தைகளை
பிரசவிக்கும் தாய் !

சாதாரணமானவனை
சாமனியனாக்கும் மந்திரவாதி !

அறிவு வரம் தர.....
தவம் கிடக்கும் தேவதை !

புத்தகப் புழுக்கள்
கூடி வாழும் சரணாலயம் !

திங்கள், 6 ஜூன், 2011

மனநல மருத்துவமனை


சுதந்திரம் பெற்ற
மூளைகள் .......

முடங்கி கிடக்கும்
மூலைகள் !

மழை



பூமி மகள்
வளமாய் வாழ
வானத் தாய் தரும்
'சீதனம்' !


பூமிப் பெண்ணின்
திருமணத்திற்கு
வானத் தந்தை தரும்
'வரதட்சணை' !


வாக்கப் பட்ட பூமிக்கு
மேகம் தரும்
'மென் முத்தம்' !

கண்ணீர்

கவலைக்கும்

அவலைக்கும்

உவர்க்கிறாய் - ஏன்


என்னவளைக்
காணுகையில் மட்டும்
இனிக்கிறாய் !

மனமடங்கு உத்திரவு !


மல்லிகை வாசம்!
கொலுசு சத்தம்!

கொஞ்சும் குரல் நயம்!
இருந்தும் எங்கும் நிசப்தம் !
- ஊரடங்கு உத்திரவாம் !

களவு மனமே .........
ஏன் உனக்கில்லை
' மனமடங்கு உத்திரவு '!

திங்கள், 30 மே, 2011

மரணம் என்னும் தேவதை


கண்ணே .......................!
நீ கை விடுகிறேன்
என்று மட்டும் சொல்

இன்னொருத்தி ........
கைப்பிடிக்க காத்திருக்கிறாள்
அவள் பெயர்தான்
மரணம் !

கண்டக்டர்

டிரைவரின் சிண்டை
தன் கையில்
வைத்திருக்கும் .......

"சில்லரைக்காரர் "!

சனி, 28 மே, 2011

மலைகள்

பூமிப் பெண்ணின்
பருவ காலப்
பருக்கள் !

கவிஞனின் பார்வை

பிறந்த நாள் : ஜூன் 20.

(என்னுடைய பிறந்த நாளும் )


கால மகள்

கண் புதைந்தாள் !


இரவு மோகினி எங்கும்

உடல் விரிக்கிறாள் !


நிலாப் பெண்
வின் மீன்களை
விற்பனை செய்கிறாள் !

மோகக் கதிரவன்
மென் பனியை
மெல்ல மேய்ந்து போகிறான் !

புல் மூக்கின் நுனியில்
வைர மூக்குத்தி
விடிய வந்த சூரியன்
களவாடிப் போகிறான் !

பிளவு பட்ட உயிர்

மறு பிறப்பு எடுத்தது !


பார்வைகள் ....... இது
கவிஞனின் பார்வைகள் !!



உரசல்




தீப் பெட்டிக்கு
மரண அடி !

பஸ்ஸில்
தர்ம அடி !!

வெள்ளி, 27 மே, 2011

கனவு




கண்டவுடன் வந்து

ஒட்டிக்கொள்ளும் - என்

நினைவின் பல்லக்கு!



அரசவை நாயகனாய்...............

அங்கயர்கரசனாய்.............



கிறக்கத்தில்

மன உறக்கத்தில்



உதறி எழுந்து அமர்கையில் .....

ஊதாறிக் கனவு இளித்தது !



கனவு........................ ஏனோ

எனக்கு புளித்தது !!